1. Home
  2. தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளோம் - அண்ணாமலை..!

1

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயம் அருந்தி கிட்டத்தட்ட 65 பேர் உயிரிழந்துள்ளனர். 23.06.24 அன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணம் நான். நான் ஏதோ சதி செய்து எங்கிருந்தோ கள்ளச் சாராயத்தைக் கொண்டு வந்து அதை கள்ளக்குறிச்சியில் கொடுத்ததால், அதனால் மக்கள் இறந்ததாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகப் பெரிய துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டு காலத்தில், இதுவரை யார் மீதும் நான் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. எனக்கு எதிராக எத்தனையோ பொய்கள், அவதூறுகளை பேசியிருந்தனர். ஆனாலும் அப்போதெல்லாம் நான் அவதூறு வழக்கு எதுவும் தொடரவில்லை. இப்போது நான் அவதூறு வழக்கு தொடர காரணம், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையெல்லாம் தாண்டி சென்றுவிட்டது.

ஒரு மூத்தவர், தனது 80 வயதில் 60 ஆண்டுகால அரசியலைப் பார்த்திருக்கும் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் காலம் முடிந்துவிட்டது என்பது முழுமையாக தெரிந்துவிட்ட பிறகு, அவர் வாயில் இருந்து பொய், அவதூறு பேச்சுகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடு தான், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு நான் தான் காரணம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். எனவே, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து பெறப்படும் ஒரு கோடி ரூபாயைக் கொண்டு கள்ளக்குறிச்சியில் குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முகாம் அமைக்கப்படும். அதுதான் எங்களுடைய நோக்கம். எனவே, இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like