ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணாமலை..பல்லாவரம் உயிரிழப்புக்கு இது தான் காரணம்..!
தாம்பரம் பல்லாவரம் அடுத்துள்ள மலைமேடு என்ற பகுதியில் இம்மாத தொடக்கத்தில் திடீரென சுமார் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குத் தாம்பரம் மாநகராட்சி சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் கழிவுநீர் கலந்ததாகவும் இதுவே மரணங்களுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இருப்பினும், அமைச்சர் தா. மோ அன்பரசன் இதை மறுத்து இருந்தார். அதாவது தண்ணீரில் கழிவுநீர் கலந்ததாகத் தெரியவில்லை என்றும் உணவு காரணமாகப் புட் பாய்சன் ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அங்குச் சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்பகுதியில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டது. அதேபோல தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரும் அந்த பகுதிகளில் சோதனை செய்தார். அப்போது மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்பட்ட நீரை அவர் குடித்தார்.
இருந்த போதிலும், தண்ணீரில் கழிவு நீர் கலந்ததே மரணங்களுக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதற்கிடையில், அப்பகுதிக்குச் சென்ற பாஜக தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தர். மேலும், அவர்களும் தனியாகத் தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து தனியார் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சூழலில் தண்ணீர் பரிசோதனை ரிப்போர்ட்டை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடிநீரில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் அதுவே உயிரிழப்பு காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்..
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த, டிசம்பர் 5 அன்று, சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், மூன்று பேர் பலியானதும், இருபதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுமான துயர சம்பவம் நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும், பொதுமக்கள் தவறினால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும், பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினார்.
அந்தப் பகுதியில் அன்றைய தினங்களில் வழங்கப்பட்ட குடிநீரைப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. குடிநீரில், கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக் கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கும்போது, அடிப்படை சோதனைகளைக் கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில், பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்?" என்று விமர்சித்துள்ளார். மேலும், பல்லாவரத்தில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் என்றும் சில ஆவணங்களைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.