முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய பேரணி பாராட்டுக்குரியது - அண்ணாமலை..!
இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை டிஜிபி அலுவலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை நேற்று பேரணி நடைபெற்றது. இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே மோதல் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், “ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அனைவரும் ஒரே அணியில் நின்றனர். நான் கைநீட்டி குறை சொல்லும் அளவுக்கு யாருடைய நடத்தையும் இல்லை. ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணியை நடத்தியுள்ளார்.
இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் இருக்கிறார்கள்.. மற்ற மாநிலங்களில் செய்யாததை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். அதையும் நாம் பாராட்டிதான் ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “நம் தேசப் பற்றை வெளிப்படுத்தும் விதம் வேறு மாதிரியாக இருக்கலாம். இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. போர் நிறுத்தம் என்பது பாகிஸ்தானுக்கு கடைசி வாய்ப்பு. பாகிஸ்தான் நிலப்பரப்பை பிடிப்பது இந்தியாவின் நோக்கம் அல்ல. பயங்கரவாதத்தை அழிப்பது மட்டுமே நமது நோக்கம். போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறினால் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.