1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக ஒரு இடம் கூட பிடிக்காததற்கு அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான் காரணம் - ஆர்.பி.உதயகுமார் தாக்கு..!

1

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

தமிழக அரசியலில் வெத்து விளம்பரம், வெளிச்சம் காட்டும் வகையில் அரசியல் அனுபவம் இல்லாமல், பொது வாழ்வில் அனுபவம் இல்லாமல் அவதூறு பரப்பி, அரசியல் பண்பு இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார். எடப்பாடியார் மீது அவதூறு பரப்பி அடிப்படை ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

தன்னை முன்னிலைப்படுத்த தேவையான அனுபவம் தகுதி வேண்டும். ஆனால், அண்ணாமலை அதை பெற்றுள்ளாரா ? எதுவும் இல்லை. கற்பனையை கொட்டி விட்டு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் பேச்சு தெளிவாக காட்டுகிறது. எடப்பாடியார் தனது 50 ஆண்டு கால பொது வாழ்வில் ஆற்றிய சேவையை மறைக்க முடியாது. கிளைக் கழக செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி 50 ஆண்டு காலம் கழகத்தில் பணியாற்றி, அம்மாவின் அமைச்சரவையில் இருந்து சேலத்துக்கு வளர்ச்சி திட்டங்களை கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து தமிழகத்துக்கு சேவைகள் செய்தார். அவர் செய்த ஆயிரமாயிரம் சாதனைகளை பட்டியிட்டுச் சொல்ல முடியும். 7.5 சகவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வரலாற்றில் இடம் பிடித்தார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியவர். குடிமராமத்து திட்டங்கள், தமிழகத்தின் சாலைகளை மேம்படுத்துதல், உயர் பாலங்கள், மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்கள் என கடந்த நான்கரை ஆண்டு காலம் மக்களுக்கு சேவை செய்தார்.

2 கோடி 18 லட்சம் குடும்பங்களுக்கு, 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார். கொரோனா காலங்களில் தன் உயிரை துச்சமாக மதித்து 32 வருவாய் மாவட்டத்திற்கு நேரில் சென்று மக்கள் உயிரை காப்பாற்றினார் தடுப்பூசி கண்டுபிடிக்காத காலத்தில் கூட தடுப்பு நடவடிக்கை எடுத்தார். அண்ணாமலை இதையெல்லாம் உணராமல் மறைக்கும் விதமாக அவதூறு பிரச்சாரத்தை பரப்புகிறார். சாமானியரான எடப்பாடியார் உழைப்பால், கருணையால் 8 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார். இதை சகித்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள்.

அண்ணாமலை ஏற்கெனவே அரவக்குறிச்சியில் நின்று தோற்றுப் போனார். அதனை தொடர்ந்து கோவையில் கோடிகளை வாரி இறைத்து பல்வேறு வார்த்தை ஜால வித்தைகளை காண்பித்தார். மக்கள் அதை எல்லாம் நிராகரித்து விட்டனர். ஆனால் இன்றைக்கு, பாஜக வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்லி விவாதம் நடத்துகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர், உள்துறை அமைச்சர் அதனை தொடர்ந்து நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 மூத்த அமைச்சர்கள் களத்தில் நின்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அப்படி இருந்தும் அவர்களால் தமிழகத்தில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், அண்ணாமலை போன்ற அவசரக்குடுக்கைகள் தான்.

பாரதப் பிரதமர் வாராணசியில் கடந்த 2019 தேர்தலில் ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தற்பொழுது, 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் முதல் 3, 4 சுற்றுகளில் பின்தங்கி அதன் பின் தான் வெற்றி உறுதி செய்யப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. தற்பொழுது மெஜாரிட்டி இடம்கூட பிடிக்க முடியவில்லை. கூட்டணி தயவால் தான் தற்பொழுது ஆட்சியைப் பிடித்துள்ளனர். அண்ணாமலை போன்ற அனுபவம் இல்லாதவர்கள் அரைவேக்கட்டுத்தனமாக அவதூறு பிரச்சாரம் செய்ததால் தமிழக மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் மாறுபட்ட தீர்ப்பைத் தந்துள்ளனர். தமிழக உரிமைகள் காக்கப்பட வேண்டும், புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், தமிழகத்துக்கான உரிமைகளை காத்திட வேண்டும் என்பதற்காக எடப்பாடியார் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்டோம்.

2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்தோம். அப்போது 19.39 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தற்பொழுது பாஜக கூட்டணி இல்லாமல் 20.46 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். தமிழகத்தில் பாரதப் பிரதமரை முன்னிலைபடுத்தித் தான் வாக்குகள் விழுந்தன. அண்ணாமலைக்காக யாரும் ஒரு வாக்குக்கூட போடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் ராமதாஸ், பாரிவேந்தர், டிடிவி, ஓபிஎஸ், ஜான்பாண்டியன் ஆகியோர் கூட்டணி வைத்தனர். இருந்தும்கூட வாக்கு குறைந்துள்ளது. எடப்பாடியார் அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். முதலில் அண்ணாமலை அவர் முகத்தை கண்ணாடியில் பார்க்கட்டும் அப்போதுதான் அவருக்குப் புரியும்.

பாஜகவில் தற்போது கிரிமினல் பின்புலம் உள்ளவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். தற்போது அவர்களுக்கு எதிராக கைது, வழக்கு நடவடிக்கைகள் வருகிறது. பாஜகவில் உழைத்த மூத்தவர்கள் அனுபவசாலிகளை எல்லாம் திட்டமிட்டு அண்ணாமலை புறக்கணித்து வருகிறார். முதலீடு போடாமல் லாபம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதேபோல், இன்றைக்கு அண்ணாமலை எந்த முதலீடும் செய்யாமல், உழைப்பும் இல்லாமல், தியாகம் செய்யாமல் பலனை அறுவடை செய்ய நினைக்கிறார். அவருக்கு எப்போதும் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

அதிமுக மீது அவருக்கு ஏன் இத்தனை அக்கறை? அதிமுகவை புரட்சித்தலைவர் 17.10.1972 -ல் தொடங்கியபோது கொடியில் அண்ணா படத்தை பொறித்தார். அண்ணாவின் கொள்கையை கொண்ட அண்ணாயிசத்தை உருவாக்கினார். ஆனால், அண்ணாவைப் பற்றிய அண்ணாமலை தவறாக பேசினார். அதேபோல் எட்டு கோடி மக்களின் தெய்வமான அம்மாவை பற்றி அவதூறாக பேசினார். அவரது இல்லத்தரசிக்கு ஒப்பிட்டு அம்மாவை பேசியதை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்டவருடன் நாங்கள் எப்படி தொடர்ந்து பயணம் செய்ய முடியும்? ஆனால் அண்ணாமலை, எடப்பாடியாரை பாரதப் பிரதமருக்கு வலதுபுறத்தில் உட்கார வைத்தோம் என்று கூறுகிறார். இதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் உட்கார வைத்துவிட்டு அதிமுக அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் அண்ணாமலை அவதூறாகப் பேசினார்.

எடப்பாடியார் தமிழக உரிமைகளை காக்க வேண்டித்தான் உழைத்து வருகிறார். இதே அண்ணாமலை தமிழகத்துக்கு என்ன செய்தார். தமிழகத்துக்கு நிதியைப் பெற்றுத் தந்தாரா? எடப்பாடியார் மத்திய அரசை வலியுறுத்தி 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டுவந்தார். அதேபோன்று கொண்டு வந்தாரா? சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி கொண்டு வந்தாரா அண்ணாமலை? சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கடுமையான மழை பெய்த போது அதற்கு மழை நிவாரண நிதி பெற்று தந்தாரா? வாய்சவடால் பேசுவதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

இன்றைக்கு மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கிறார்கள். முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட முயற்சிக்கிறார்கள். பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் மத்திய அரசு தற்போது வரை வாய் திறக்கவில்லை. காவிரியில் உரிய நீரை பெற்றுத் தர மத்திய அரசு வாய்திறக்கவில்லை. இதற்கெல்லாம் அண்ணாமலை என்ன செய்தார்? அண்ணாமலை பேராசைப்படுகிறார். அறிவுகெட்டத்தனமாக கேள்வி எழுப்புகிறார். கிராமத்தில் சொல்லுவார்கள் காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்று அதேபோல் எடப்பாடியார் மக்கள் சேவை செய்து காய்த்த மரமாக உள்ளார். அதனால் அவர் மீது பழிகளை சுமத்துகிறார்கள். அண்ணாமலை சுற்றிச் சுற்றி சூழ்ச்சி வலை விரிக்கிறார். அவர் விரிக்கும் வலையில் அதிமுக தொண்டர்கள் யாரும் சிக்க மாட்டார்கள்

அதிமுகவை தமிழக மக்கள் கைவிடமாட்டார்கள். இன்றைக்கு அதிமுகவை எடப்பாடியார் காப்பாற்றி வருவதை சிலர் கபளீகரம் செய்ய முயற்கிறார்கள். அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் உள்ளார். அண்ணாமலை எடப்பாடியாரை பற்றி பேசியதை எல்லாம் வாபஸ் பெறவேண்டும். இல்லை என்றால் அண்ணாமலைக்கு எதிராக சிறை செல்லும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்த அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like