1. Home
  2. தமிழ்நாடு

2014ல் சி.பி ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கியுள்ளார்

1

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இம்முறை ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மதுரை, கோவை, நெல்லை, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிமுக வேட்பாளர்கள் 7 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட கோவையிலேயே அக்கட்சி 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், அதிமுக – பாஜக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. அதிமுகவை விட பாஜக அதிக வளர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணாமலை கூறினார். கோவையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம் என கூறினார். இதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக 2ஆம் கட்ட தலைவர்கள் அதிகம் பேசிவிட்டதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால், அதிகமாக பேசியதே அண்ணாமலைதான். அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை. அதனால் தான் கூட்டணி முறிந்தது. கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் 30 – 35 தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருப்போம்.

கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான். அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும். அதிமுக தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம். 2014ல் கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார். பாஜக கூட்டணியை விட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like