1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் - அண்ணாமலை..!

1

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக டெல்டா பகுதியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக செய்யவில்லை. அதன் காரணமாக தான் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.

அதன் விளைவால், இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான். ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்களின் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை.

தமிழக அரசு உடனடியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளைப், போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
 

Trending News

Latest News

You May Like