எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
அண்ணாமலை சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், தன்னைப் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். இது இருவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பல இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அண்ணாமலை விரக்தியில் அ.தி.மு.க.வுக்கு எதிராக பேசி வருகிறார். மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு மேனேஜர் மட்டுமே. அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார்
அ.தி.மு.க.வைத் தொட்டுப் பார்த்தால் கெட்டுப் போவீர்கள். எத்தனை ஜென்மம் எடுத்து வந்தாலும் அ.தி.மு.க.வை அண்ணாமலையால் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி என்பது பா.ஜ.க.வுக்கு என்றுமே பகல் கனவுதான். அண்ணாமலை அழிவை நோக்கிச் செல்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கோட்டை பக்கமே வர முடியாத நிலைதான் தற்போது உள்ளது” என்று அவர் கூறினார்.