தமிழக பாஜகவில் "ஸ்டார்ட் - அப்" பிரிவு தொடக்கம் : அண்ணாமலை அறிவிப்பு..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாஜக நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அணிப் பிரிவுகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு, தரவு மேலாண்மைப் பிரிவு மற்றும் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.
இந்நிலையில், தற்போது, புதுமையான முயற்சிகளை உற்சாகப்படுத்தவும், ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஒரு முக்கிய தகவல் தொடர்பு பாலமாக செயல்படுவதற்கும், ஸ்டார்ட் - அப் பிரிவு என்ற புதிய பிரிவை தமிழக பாஜக தொடங்கி இருக்கிறது.
இந்த முன்னெடுப்பானது தமிழக இளைஞர்களிடையே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், திறமையான மற்றும் புதுமையான சிந்தனையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளத்துக்கு முக்கிய பங்களிப்பதற்கும், தமிழக பாஜக கொண்டிருக்கும் குறிக்கோளை வெளிக்காட்டுகிறது. ஸ்டார்ட் - அப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.