1. Home
  2. தமிழ்நாடு

ஆளுங்கட்சி சார்ந்தவர்கள் 30 சதவீதம் வரை கமிஷன் கேட்பதால் : அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Q

ஊழலுக்கு எதிராக "என் மண், என் மக்கள் " என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் 193-வது சட்டமன்ற தொகுதியாக நேற்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் தேரடி பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரை பாதயாத்திரை நடைபெற்றது. முன்னதாக பாதயாத்திரையை தொடங்கிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாதயாத்திரையின் போது கட்சித் தொண்டர் ஒருவர் அண்ணாமலையை சந்தித்து பூங்கொத்து கொடுக்க முற்பட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இளைஞர்கள் தொண்டரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
கயிறு மூலம் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்த தொண்டருக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கட்சித் தொண்டரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞர்களின் செயலால் அங்கு இருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இதைத்தொடர்ந்து, ’என் மண், என் மக்கள்’ நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ”தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதி அமைந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் 30 சதவீதம் வரை தொழில் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்கும் காரணத்தினால் இங்கு முதலீடு செய்து தொழிற்சாலைகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரும்பாலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை. காரணம் கமிஷன்.
பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் உத்தர பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் தொழில்களை தொடங்க முன்னுரிமை கொடுப்பதால் தமிழகம் பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், ”மோடி அரசியலுக்கு எதிராக அரசியல் செய்ய யாருமில்லை. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண சாலை வசதி கூட ஏற்படுத்த துப்பில்லாமல் திராவிட மாடல் அரசு உள்ளது. தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்துள்ளது.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ”தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகிவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 70 ஆண்டு கால ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக தான் இருந்து வருகிறது. திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 15 அமைச்சர்களுக்கு ஊழல் செய்ததாக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்” இவ்வாறு ’என் மண், என் மக்கள்’ நடைபயணத்தில் அண்ணாமலை பேசினார்.

Trending News

Latest News

You May Like