அன்னை இல்லம் விவகாரத்தில் திடீர் திருப்பம் : பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராம்குமார்..!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, துஷ்யந்தின் தந்தை ராம்குமார் தரப்பில், அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அன்னை இல்லத்தை தனது சகோதரர் நடிகர் பிரபுவுக்கு, தனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த வீட்டின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் கூறி, ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து,விசாரணை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.