அண்ணா பல்கலை. மாணவி வழக்கு... மே 28-ல் தீர்ப்பு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக மாணவருடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்தப் பகுதி வழியாக வந்த ஞானசேகரன் என்ற நபர் அந்த மாணவரை அடித்து துரத்தி விட்டு அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது. இந்த சம்பவத்தை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்தது.
மேலும், இந்த வழக்கை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது என்றும், இந்த வழக்கை மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கை விசாரிப்பதோடு, இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாகவும் விசாரித்து விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேலும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததன் காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை சென்னை மகளிர் நீதிமன்றம் குறிப்பு எடுத்துள்ளது. இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவி வழக்கில் வரும் மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.