அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு!!
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 முதுநிலை பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையானது டான்செட் எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
நெல்லை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு 10 முதுநிலை பொறியியல் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பொறியியல் பாடப்பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 250 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.
இதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள 6 முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு இந்த படிப்புகள் ஒரு வரப்பிரசாதமாக வந்த நிலையில், மாணவர் சேர்க்கை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த 6 முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
newstm.in