அவுட்சோர்சிங் முறை வாபஸ் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
இந்தியாவிலே மாநிலங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடம் பெற்றது. பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பயன்பாட்டு அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இங்கு உயர்கல்வி வழங்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுப்டம் கல்லூரிகள் இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து, பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு இதுகுறித்து திடீர் முடிவெடுத்து அதற்கான சுற்றிக்கை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் உட்பட பல்வேறு பிரிவு இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றிக்கையில், ”பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் குழு எடுத்த முடிவின்படி, புதிதாக மேற்கொள்ளப்படும் உதவி பேராசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள் நியமனம் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏதேனும் திட்டங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டால் தினக்கூலி அல்லது தொகுப்பூதியத்தில் தற்காலிக பணியாளர்களை திட்ட காலம் முடியும் வரை பணியில் அமர்த்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் பணியாற்றினால் அவர்களை பணியாளர் குறைவாக இருக்கும் வேறு துறைகளுக்கு பணியமர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக பணியாளர் உள்ள நிலையில், இனி உதவி பேராசிரியர்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப்படும் என்ற அறிவிப்பு கல்வியாளர் மற்றும் பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றது அண்ணா பல்கலைக்கழகம். மேலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் என மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.