இன்னும் 2 மாதங்களில் அண்ணா மினி ஸ்டேடியம் தயார்!
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி அண்ணா திடலில் ரூ.12 கோடியே 19 லட்சம் செலவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அண்ணா திடலைச் சுற்றி 179 நகராட்சி கடைகள் இருந்தன. அவை அகற்றப்பட்டன. கட்டிடப் பணியைத் தொடங்கும் போது, ‘கட்டுமான பணி முடிந்ததும், ஏற்கெனவே இருப்பவர்களுக்கே புதிய கடைகள் தருவோம்’ என்றதால் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.
இதையடுத்து, அண்ணா திடலில் 14 ஆயிரத்து 435 சதுர மீட்டர் பரப்பளவில் மினி விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நடைபெற தொடங்கியது. இங்கு விளையாட்டு வீரர்கள் தங்க தனித்தனியே 14 அறைகள், 1,000 பேர் அமரும் வகையில் கேலரி, அலுவலகம், பயிற்சிக் கூடம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.
விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் கேலரிகள் அமைக்கப்பட்டன. அத்துடன் அண்ணா திடலைச் சுற்றி கடைகள் அமைக்கப்பட்டன. இறுதியில் கடை உரிமையாளர்களை தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. கடை உரிமையாளர்களாக பலரும் வந்ததால் சிக்கல் ஏற்பட்டது. அதை தற்போது சரி செய்துள்ளனர்.
முதலில் 9 கடைகள் கட்டாமல் விடுப்பட்டது அறிந்து தற்போது அந்தக் கடைகளையும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொத்தம் 179 கடைகளும் கட்டப்பட்டு, உரிய நபர்களுக்கு அதை வழங்குவோம் என்று தெரிவிக்கின்றனர்.
நிதியளவும் நிர்ணயித்த அளவைத் தாண்டிய நிலையில், அதற்கு ஒப்புதல் தரப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. “பூச்சு பணி, மின் இணைப்பு பணி, வர்ணம் அடிப்பது என பல பணிகள் விரைந்து நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் பணிகளை முடித்து விடுவோம்” என்று ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கின்றனர்.