1. Home
  2. தமிழ்நாடு

110 நாட்களுக்குப் பிறகு அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன்..!

1

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி, 20 லட்ச லஞ்சம் வாங்கியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தனர். அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தள்ளுபடியானது.

அங்கித் திவாரி உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், 'கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீண்ட நாள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீனை வழங்கி உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை கலைக்கவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் உரிய அனுமதி பெறாமல் செல்லக் கூடாது, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த நீதிபதிகள் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், அங்கித் திவாரி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

Trending News

Latest News

You May Like