அனில் அம்பானிக்கு 5 ஆண்டு தடை! இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது..!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் திருபாய் அம்பானிக்கு இரு மகன்கள். மூத்த மகன் முகேஷ் அம்பானி, ஜியோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியும் அவர் வசம் உள்ளது.
அவரது தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.ஆனால், அவரது இளைய சகோதரரான அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக செயல்பாடிழந்து, நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதனால் அவருக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்படி, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.
தொழிலதிபர்கள் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், சுதால்கருக்கு ரூ.26 கோடியும், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தையில் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன பங்குகளுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.