தமிழகம் வருகிறார் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்..!

இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று தனது சனாதன தர்ம பயணத்தை தொடங்குகிறார் பவன் கல்யாண்.சனாதன தர்ம சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் நான்கு நாட்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு கோயில்களை பார்வையிடுவார்.பவன் கல்யாண் நான்கு நாட்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பல்வேறு கோயில்களில் வழிபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அனந்த பத்மநாப சுவாமி கோவிலை தொடர்ந்து அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீ பரசுராம சுவாமி கோயில், அகஸ்திய ஜீவ சமாதி, கும்பேஸ்வரர் கோயில், சுவாமிமலை மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்கிறார் பவன் கல்யாண். சனாதன தர்மம் குறித்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை பவன் கல்யாண் முன்னர் கண்டித்திருந்தார், இது தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் பிரச்சனையாக மாறியது. இப்போது,பவன் கல்யாண் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு வர இருப்பதால், அவரது சுற்றுப்பயணம் அரசியல் ரீதியாக விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் பேசிய பவன் கல்யாண், "சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி.. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது." எனப் பேசி இருந்தார்.