ஆந்திர முதல்வர் திட்டவட்டம் : இனி வேற்று மதத்தினருக்கு பணி வழங்கப்படாது..!
ஆந்திர மாநிலம் அமராவதியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஆந்திராவில் ஒவ்வொரு கோயிலிலும் ஆன்மிகம் செழித்தோங்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தை பறிக்காமல் அவர்கள் மீண்டும், மீண்டும் அக்கோயிலுக்கு வரும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிகவும் தூய்மையாக இருப்பது அவசியம். ஆந்திராவில் பல முக்கிய கோயில்கள் வனப்பகுதியில் இருப்பதால் சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, வனத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும். இந்தகுழு மூலம் கோயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோயில் பிரசாதம், அன்னதானம் ஆகியவை மிகவும் தரமாக இருப்பது அவசியம். முந்தைய ஜெகன் ஆட்சியில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. கோயில் ரதம் கூட எரிக்கப்பட்டது. இக்குற்றவாளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்துக்களை கட்டாய மதம் மாற்றம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தவறானது. கட்டாய மதமாற்றம் ஆந்திராவில் நிகழக் கூடாது. இந்து கோயில்களில் இனி வேற்று மதத்தினருக்கு பணி வழங்கப்படாது. ஆந்திராவில் உள்ள 1,110 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இனி ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் இரண்டு உறுப்பினர்கள் அதிகரிக்கப்படுவர். அதில் ஒருவர் பிராமணர், மற்றொருவர் நாயி பிராமணராக (மேள, தாள இசைக்கலைஞர்கள்) இருப்பார்கள். பிராமண கார்ப்பரேஷன், பிராமண கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துங்கள்.
இவற்றுக்குபுதிய அறங்காவலர் குழுவைஏற்பாடு செய்யுங்கள். வேதம் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள 5,470 கோயில்களுக்கு தீப, தூப, நைவேத்திய செலவுக்காக மாதந்தோறும் வழங்கப்படும் தொகை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள கோயில்களில் பயணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் வழங்கிட வேண்டும். கோயில்களுக்கு வரும் வெள்ளி காணிக்கைகளை உருக்கி, அந்தந்தகோயில்களின் சுவாமி மற்றும் தாயாரின் உருவம் கொண்ட டாலர்களாக மாற்றி அதனை பக்தர்களுக்கு விற்கஏற்பாடு செய்யுங்கள்.
87 ஆயிரம்ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை விரைவில் தொடங்குங்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.