ஆந்திரா கனமழை : தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
விஜயவாடா,மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக மலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் தரைமட்டமாகியது.
அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கியவர்கள் மீது பாறைகள் விழுந்ததில் உடல் நசுங்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தொடர் மழையின் காரணமாக உப்பலாவில் ஆசிரியர் ராகவேந்திரா பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டு தனது காரில் மான்விக், சவுரிஷ் என்ற மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றார்.
பாலத்தில் அதிக அளவு மழை வெள்ளம் சென்றதால் கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டது. காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதே போல் மங்களகிரியில் கண்டாலய பேட்டை மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில் நாகரத்தினம்மா என்பவர் இடிப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தார். மழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மழையில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.