ராமதாஸ் அதிரடி : பாமக லெட்டர் பேடிலிருந்து அன்புமணி பெயர் நீக்கம்...!

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான அதிகார மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இவர்களுக்குள் பிரச்சனை நீடித்துவரும் நிலையில், இருவரும் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் என்று இருவரும் மாறி மாறி செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை நேற்று ராமதாஸ் வெளியிட, பாமகவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின் ராமதாஸ் தரப்பில், அன்புமணியை பாமக நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. செயல் தலைவராக உள்ள அன்புமணி நிர்வாக குழுவில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் பாமக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் கடிதத்தை ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ளார். வழக்கமாக அதில் நகல் என்ற இடத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் இருக்கும். ஆனால், இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பாமகவினர் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.