69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது - அன்புமணி ராமதாஸ்..!
விழுப்புரம் அருகே காணையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடரப்பட்டது. அப்போது வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் 69 சதவீதத்துக்கு மேல் இருக்கிறார்களா எனக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி உத்தரவிட்டனர். ஆனால், 2012-ம் ஆண்டில் தமிழக அரசு கணக்கெடுப்பை நடத்தாமல் தன் தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரி புதிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழக்கு விசாரித்து முடித்த பின்னர் இந்த விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் கூடவுள்ளது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிச்சயம் 69 சதவீத இடஒதுக்கீட்டை வழக்கை நிச்சயம் விசாரிப்பார்கள்.
தமிழகத்தில் 69 சதவீதத்துக்கு மேல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களா, அதற்கான கணக்கெடுப்பை மேற்கொண்டீர்களா என நிச்சயம் நீதிபதிகள் கோருவார்கள். தமிழக அரசு அப்போது என்ன பதில் சொல்லப் போகிறது? 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. இது பெரிய அநீதியாகும்.
69 சதவீத இடஒதுக்கீடு பறிபோகாமல் இருக்க, சமூக நீதி காக்கப்பட வேண்டுமெனில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இதை செய்வதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அக்கறை இல்லை. பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள அந்த மாநில உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில் தமிழக முதல்வருக்கு மட்டும் ஏன் அச்சம் ஏற்படுகிறது?
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அது தவறு. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மக்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் கலவரம் வெடிக்கும். மிகப்பெரிய பிரச்னை ஏற்படும். அந்த நிலை உருவாகாமல் இருக்க, தமிழக முதல்வர் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தேர்தலுக்காக அரசியல் பேசவில்லை. சமூகநீதியைக் காக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். எந்த சமூகம் பின்தங்கியுள்ளது, எந்த சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது, எந்த சமூகம் முன்னேறியிருக்கிறது போன்றவற்றை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு உதவும். எனவே உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறினார்.