பா.ம.க.வின் தலைவராக அன்புமணியே தொடர்கிறார்...அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை' - வழக்கறிஞர் பாலு..!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலக்கெடு வழங்கப்பட்டது. இருப்பினும் 16 குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூறாததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
இதனால் பா.ம.க. செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பா.ம.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை. கட்சி விதிகளின்படி அன்புமணியே பா.ம.க.வின் தலைவர். தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பா.ம.க.வின் தலைவராக தொடர்கிறார். தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை.
பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கது அல்ல. ராமதாஸ் உத்தரவுகள் பா.ம.க.வை கட்டுப்படுத்தாது.
பா.ம.க. தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். அன்புமணியை நீக்கியது செல்லாது. பா.ம.க. நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளது. நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் இல்லை.
பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் என்ற முறையில் இதனை சொல்கிறேன். அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. உளவு பார்த்திருந்தால் இப்படி ஒரு சூழல் எழுந்திருக்காது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.png)