170 கி.மீ.பாதயாத்திரை செல்லும் அனந்த் அம்பானி..!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, மிகுந்த பக்தியுடன் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்.
நாட்டில் உள்ள பிரபல ஆன்மிக தலங்களான பத்ரிநாத், கேதார்நாத் போன்றவற்றுக்கு செல்வதை, அவர் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவிலும் பங்கேற்று புனித நீராடினார்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ரிலையன்ஸ், நாட்டின் மிகப்பெரிய புதிய பசுமை எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றை அனந்த் அம்பானி கவனித்து வருகிறார்.
இவை தவிர, வந்தாரா விலங்கு சரணாலயத்தை நிறுவி உள்ளார். இது, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
ரிலையன்சின் முக்கிய தொழில்களை கவனித்து வரும் அதே வேளையில், ஆன்மிக பாரம்பரியத்தையும் பின்பற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அனந்த் அம்பானி, குஜராத்தில் உள்ள தன் பூர்வீக ஊரான ஜாம்நகரில் இருந்து துவாரகாவுக்கு 170 கி.மீ., பாதயாத்திரையை துவங்கி உள்ளார்.
கடந்த மார்ச் 29ல் துவங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை, தன் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் 8ம் தேதி துவாரகாவில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, தினமும் ஏழு மணி நேரம் இரவு துவங்கி அதிகாலை வரை, 20 கி.மீ., துாரம் நடக்கிறார்.
இந்த பாதயாத்திரையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பொதுமக்களும் அவருடன் பங்கேற்று வருகின்றனர். பாதயாத்திரையின் போது, சிலர் அனந்த் அம்பானியிடம் துவாரகாதீஷின் புகைப்படங்களை பரிசாக அளித்தனர்; பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் இந்த பாதயாத்திரையில் அனந்த் அம்பானி, ஹனுமன் சாலிசா, சுந்தர காண்டம், தேவி ஸ்தோத்திரம் ஆகியவற்றை உச்சரித்தபடி செல்கிறார்.
உடல் பருமன், ஆஸ்துமா, நுரையீரல் நோய் போன்ற பிரச்னைகளை பொருட்படுத்தாமல், அனந்த் அம்பானி இந்த கடினமான பாத யாத்திரை மேற்கொண்டுள்ளது, அனைத்து தரப்பினரிடையே பரவ லான பாராட்டுகளை பெற்றுள்ளது.