பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டும் கிடைத்திருக்கும். ஆனால்...
நாம் தமிழர் கட்சியின் தேனி வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசுகையில், தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு ஞாபகம் வருகிறது. தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள், நாங்களே பாஜகவுக்கு வாக்கு அளிக்கிறோம்.
எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. தேசிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். பாஜகவினர் என்னிடம் எவ்வளவு ஆசை வார்த்தை கூறினார்கள். அங்கு சேர்ந்திருந்தால் 500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்ததினால் தான் டிடிவி தினகரனுக்கு, வாசனுக்கு அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பாஜக உடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர்.
இரட்டை இலையை மீட்பதே எனது லட்சியம் என்று கூறிவரும் தினகரன். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர். அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவாக காங்கிரஸ்சுக்கும் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜகவுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர் கட்சி தான். தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகமாக மாறிவிட்டது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல் புகைப்படம் என்று கூறி காமெடி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.
பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை. சின்னம் முடக்கப்பட்ட போதும், எப்போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம்.
திமுக, அதிமுக, பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு திமுக பத்து சீட்டு ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்றார் அவர்.