கோயில் திருவிழாவில் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்ட அமுதா ஐஏஎஸ்..!

தமிழ்நாடு அரசின் கீழ் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அமுதா ஐஏஎஸ் , கடந்த ஆண்டு மே மாதம் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதிலும் மாநிலத்தின் க்ரைம் ரேட் அதிகரித்திருந்த இக்கட்டான சூழலில் பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார். கடந்த 11ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்வை தொடர்ந்து குண்டம் திருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மன் வீதியுலா நடைபெற்றது. பின்னர் குண்டம் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. நெருப்பு மூட்டுவதற்கு சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மூங்கில் கம்புகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை தட்டி குண்டத்தில் நெருப்பை சீராக்கினர்.
முதலில் பூசாரி பார்த்திபன் குண்டத்தில் இறங்கினார். இவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அந்த வகையில் அமுதா ஐஏஎஸ் அவர்களும் தீ மிதித்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல்வேறு கோயில் திருவிழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். 2021ல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மாநில அரசு அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.