1. Home
  2. தமிழ்நாடு

கோவையை பரபரப்பாக்கிய அம்மோனியா வாயு கசிவு..!

1

கோவை சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான சிப்ஸ் கம்பெனி செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது புதிய உரிமையாளர் அதனை வாங்கி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இந்த நிறுவனத்தில் உள்ள பிளான்ட்டில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்னைகளால் அவதிப்பட்டுள்ளனர். மேலும், தங்களது வீடுகளை விட்டு அவசர அவசரமாகவும் மக்கள் வெளியேறியுள்ளனர். இதனால் அங்கு ஒருவிதமான பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், காரமடை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

Ammonia

தீயணைப்புத்துறையினர் கவண உடை அணிந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து பரவலை கட்டுப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, நிறுவன ஊழியர்கள் வாயுக் கசிவை கட்டுப்படுத்தினர். மேலும், கோவையில் இருந்து கோவை வடக்கு கோட்டாட்சியர் கோவிந்தன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இச்சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், “நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்து வந்த இந்த நிறுவனத்தில் தற்போது புதிய உரிமையாளர் அதனை விலைக்கு வாங்கி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். அப்போது, அங்கு இருந்த அம்மோனியா சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால், வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிற்கு கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்து நாங்கள் அனைவரும் 2 கிலோ மீட்டர் தாண்டி, எங்களது உறவினர் வீடுகளுக்குச் சென்று விட்டோம். தற்போதும் அந்த நிறுவனத்தில் வாயுக் கசிவு நின்றபாடில்லை. இந்த வாயுக் கசிவால் எங்கள் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினோம். இந்த நிறுவனத்தை முழுமையாக பரிசோதித்தப் பின்னரே செயல்பட அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like