தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு!
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் “நிலா கடல் உணவுகள்” என்ற ஆலை செயல்பட்டு வருகிறது. இது மீன்களை பதப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும் வேலை செய்து வருகின்றனர். இங்கு வழக்கம் போல் நேற்று இரவு பணியில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். நள்ளிரவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அமோனியா வாயு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஆலையின் பல்வேறு இடங்களுக்கு பரவியுள்ளது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு சம்பவம் தமிழக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அமோனியா என்பது பெருமளவில் உரத் தயாரிப்பிற்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நச்சுத் தன்மை வாய்ந்தது. குறைந்த அளவில் அமோனியா வாயுவை சுவாசித்தால் கண் எரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிக அளவில் சுவாசித்தால் மூச்சுத்திணறல் உண்டாகும். தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய சூழல் உருவானால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். இறுதியில் உயிரிழக்க நேரிடும் என்பது கவனிக்கத்தக்கது.
இதே நிலா கடல் உணவுகள் பதப்படும் ஆலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமோனியா வாயு கசிந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். சிலர் மயக்கமடைந்தனர். உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு யாருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஊழியர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியது கவனிக்கத்தக்கது.