2026இல் அம்மா ஆட்சிதான்.. ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா சூளுரை.!

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று சசிகலா பேசினார். “தமிழகத்தில் 2026இல் ஆட்சிக்கு வருவதற்கு திமுக பகல் கனவு காண்டு கொண்டிருக்கிறது. ஜெயலிதா மீது அன்பு வைத்த மக்கள் அனைவரும் தற்போதும்கூட அவரை அம்மா என்று அழைக்கின்றனர். ஆனால், தற்போது திமுகவினர் ‘அப்பா’ வேஷம் போடத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. பெண்கள் வாழவே தகுதியற்ற மாநிலமாகவும் தமிழகம் மாறிபோனது.
சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மண்டல காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர். துணை ஆணையர் அலுவலகத்திலேயே இப்படி நடக்கிறது என்றால் வெளியில் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை, சிந்திக்கவேண்டும்.
திமுகவினரின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்திந்தாலும், இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் விரும்புகின்றனர். தன்னலம் பார்க்காமல் நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் வெற்றி பெறலாம். இதுவே தமிழக மக்களுக்கு நாம் செய்யும் நன்மை. தீயசக்தியை அகற்ற அதிமுக ஒன்றிணையவேண்டும் என தொண்டர்கள் உணர்ந்துள்ளனர்.அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து நான் ஈடுபட்டுள்ளேன். எனது முயற்சி வெற்றி பெறும். அதிமுகவும் ஒன்றுபடும். அதிமுக ஆட்சி அமையும்.
இதை ஜெயலலிதா பிறந்தநாளில் தொண்டர்களுக்கு தெரிவிக்கிறேன். தாய், தோழி, உடன்பிறவா சகோதரியாக 34 ஆண்டு அவருடன் பயணித்த காலம் புனிதமானது. இதில் எத்தனையோ சோதனை, மகிழ்ச்சிகளை நாங்கள் சந்திந்துள்ளோம். ஒருநாளும் எங்களது துன்பங்களை யாரிடமும் சொன்னது இல்லை. இருவருமே சமாளித்து அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்றுளோம்.
ஜெ.ஜெயலலிதா எனும் நான் என அவர் உச்சரித்த போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ முடிந்தது. தமிழகத்தில் 2026 தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். இதற்கு அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். வென்று காட்டுவோம்." என்று சசிகலா பேசினார்.