கூட்டணி குறித்து அமித்ஷா சொல்வதே கட்சியின் நிலைப்பாடு... அண்ணாமலை சொல்வது..? தமிழிசை தடாலடி!

தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கீழ் புதிய நிர்வாகம் வர இருக்கிறது. அது தொடர்பாக தான் சுதாகர் ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டோம். தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வது இயல்புதான். திமுக கூட்டணி உறுதியாக உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக கூட்டணி உதிர்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளது.
ஆ. ராசா, அமித்ஷாவை விவாதத்திற்கு அழைத்தார், ஆனால் இப்போது திமுகவினர் கூட்டணி கட்சியினரோடு விவாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் திமுகவை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பியதில் எந்த தவறும் இல்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியில் மாற வாய்ப்பு உள்ளது.
அதிமுக பாஜக பலமான கூட்டணி தான். அதனால்தான் கூட்டணி அமைந்த நாள் முதலிருந்து விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார்கள். கட்சியில் கூட்டணி தொடர்பாக என்ன நிலைப்பாடு என அமித்ஷா கூறிவிட்டார். அதை மாநில தலைவரும் கூறிவிட்டார்.
அண்ணாமலை கூறியது தனது சொந்த கருத்து என அவரே கூறிவிட்டார். எனவே அது அவருடைய சொந்த கருத்து. கூட்டணி குறித்து மாநில தலைவர் கூறும் கருத்து மட்டும் தான் அதிகாரப்பூர்வ கருத்து. அண்ணாமலை கூறியதால் கூட்டணி விரிசல் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டி போடும், அதன் தலைமையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்பார். தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கள் விமர்சனம் செய்ய நான் இங்கு இல்லை, கட்சியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்" என தெரிவித்தார்.