1. Home
  2. தமிழ்நாடு

திமுகவை ஆட்சியை விட்டு மக்கள் துரத்துவார்கள் என்று அமித்ஷா பேசியதற்கு திமுக தரப்பு பதிலடி..!

1

பாஜக மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரை ஒத்தகடையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, திமுக அரசு ஊழலில் திளைத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். திமுக அரசை மக்கள் தூக்கி எரிவார்கள் என்றும், 2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி மலரும் என்றும் அவர் பேசியிருந்தார்.

இதற்கு திமுக தரப்பில் இருந்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என நவீன் பட்நாக்கிற்கு நெருக்கமான வி.கே.பாண்டியனுக்கு எதிராக 2024 மே மாதம் அமித்ஷா சீறினார் என்றும், இப்போது மதுரையில் வந்து தமிழ், தமிழர்கள் என கபட வேடம் போடுகிறார் எனவும் விமர்சித்தார். மேலும், ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களைத் திருடர்கள் என்பது போல பிரதமர் மோடி பேசி கொச்சைப்படுத்தியதாகவும், இப்போது மதுரையில் கீதா உபதேசம் செய்கிறார் அமித்ஷா எனவும் விமர்சித்தார்.

ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம் என அமித்ஷா சொன்னதை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.பாரதி, ஒடிசாவில் ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 41 கூட்டு பாலியல் வன்கொடுமை, 509 பெண்கள் பலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒடிசாவின் ஆட்சியைத்தான் பாஜக தமிழகத்திற்கு தரப்போகிறதா என்று கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சி செய்த நலத்திட்டங்கள் மூலமாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமியால் இப்படி ஒரு ஆட்சியை கற்பனையில் கூட தர முடியாது எனவும் குறிப்பிட்டதோடு, அதிமுகவை மிரட்டி விழுங்கிக் கொண்டுள்ள அமித்ஷா, கூட்டணி அமைத்த நாளிலேயே தனது அடிமை எடப்பாடி பழனிசாமி என்றும் காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு தேர்தலை அமித்ஷா மறந்துவிட வேண்டாம் என்றும், பாஜக தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்துவிட வேண்டாம் என்று அதிமுக வேட்பாளர்கள் கெஞ்சும் நிலைக்கு பாஜக மீதான வெறுப்பு இங்கு நிலவியது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தேர்தலில் வெற்றிபெறுவது பாஜகவின் நோக்கம் அல்ல, எப்படியாவது அதிமுக, பாமகவை கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் வெற்றிபெறுவோம் என்று அமித்ஷா சொன்னது எதுவுமே கடந்த காலங்களில் நடைபெறவில்லை என்றும், அமித்ஷாவின் பிரசாரம் திமுகவுக்கு மிகவும் வசதியானதுதான் என்றும், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டதால் அந்தப் பணியை கையில் எடுத்துள்ள அமித்ஷாவுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like