1. Home
  2. தமிழ்நாடு

தென்காசி தொகுதியில் இரண்டாவது முறையாக அமித்ஷா நிகழ்ச்சிகள் ரத்து..!

Q

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ இம்முறை தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. நேரடியாக பாஜக போட்டியிடாவிட்டாலும் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கீடு செய்த போதும் அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிடாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.‌ இதனால் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையிலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்பதால் கட்சியினர் சமாதானமடைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் ஜான் பாண்டியனும் முதன் முறையாக தென்காசி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். வேட்பாளர், நிர்வாகிகள், கட்சியினர் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பாஜகவின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் ஆதரவும் பிரச்சாரமும் போதிய அளவில் இல்லை என்ற கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பரவலாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 5ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்காசி வாய்க்கால் பாலம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் உடல் நல குறைவு, உத்திரபிரதேச பாஜகவில் உள்ள குழப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக தவிர்க்க இயலாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.‌ இரண்டாவதாக 13ம் தேதி வருகை தருவதாக அறிவித்து ஏற்பாடுகள் நடந்தது.
இந்நிலையில் இன்று மாலை இரண்டாவது முறையாக அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. . மதுரையில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார். கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் சிவகங்கை மற்றும் தென்காசி ஆகியவற்றில் கூட்டணி கட்சியின் தலைவர்களே நேரடியாக போட்டியிடுகின்றனர். சிவகங்கையில் தேவநாதன் யாதவ் நேரடியாக போட்டியிடுகிறார். தென்காசியில் கூட்டணி கட்சி தலைவரான ஜான்பாண்டியன் நேரடியாக போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை இந்த இரண்டு தலைவர்களின் பிரச்சாரத்திற்கும் வாக்கு சேகரிப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் என்று பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மிகவும் உற்சாகமாக இருந்த நிலையில் இரண்டு முறை நிகழ்ச்சி ரத்தானதால் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இரண்டு முறை கூட்டம் ரத்தானதற்கு என்ன காரணம் என்ற பேச்சு கட்சியினர் மத்தியில் பரபரப்பாக உள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது அகில இந்திய அளவில் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மற்றும் கட்சியினர் கருதுவதால் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரச்சாரம் செய்ய இயலாத நிலையில் உள்ளதாக பாஜகவினர் மத்தியில் பரவலான கருத்து உள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடியும் 15ம் தேதி அம்பாசமுத்திரம் வருகிறார். ஆனால் அம்பாசமுத்திரம் தொகுதியும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. அதாவது பாஜகவின் மாநில நிர்வாகியான நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதியில்தான் பிரதமரும் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களில் கூட்டணி கட்சியினரின் தொகுதிகளுக்கு பாஜக தேசிய மற்றும் மாநில தலைவர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வராததால் நேற்று வரை உற்சாகமாக இருந்த கட்சியினர் தற்போது சற்று சோர்வடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like