அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து..!!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதன் பகுதியாக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டில் 4 சாலைப் பேரணிகளையும், ஒரு பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
அமித் ஷா நாளை பிற்பகல் தேனியில் சாலைப் பேரணி மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனிடையே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
வெள்ளிக்கிழமை மூன்று இடங்களில் சாலைப் பேரணி மேற்கொள்கிறார். முதலில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேரணி மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து, தென்காசியில் புதிய பேருந்து நிலையம் வரை சாலைப் பேரணி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கிறார். இறுதியாக கன்னியாகுமரியில் தக்கலைப் பகுதியில் நடைபெறும சாலைப் பேரணியில் அமித் ஷா பங்கேற்கிறார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9-ல் தமிழ்நாடு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பிரதமரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திடீரென்று அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக அமித்ஷா வேறுறொரு நாளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதன் விபரம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.