1. Home
  2. தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் அமித்ஷா 5-ந் தேதி பிரசாரம்!

1

 முன்னாள் மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்து செயல்பட்ட அவர் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த முடியை எடுத்ததாக கூறுகிறார்கள்.


ம.தி.மு.க. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தபோது அவர்களுக்கு விருதுநகர், ஈரோடு தொகுதியை நாங்கள் ஒதுக்கீடு செய்தோம். அவர்கள் கேட்காமலேயே அந்த தொகுதியை வழங்கினோம். தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள். இது கவலை தரக்கூடிய செய்தியாகும். இதற்கு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முழு பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தொழிலதிபராக இருக்கலாம். ஆனால் அவர் வணிக நிறுவனங்கள் சார்பில் விளம்பரங்கள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தேர்தல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவா, வீழ்ச்சிக்காகவா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. ஜாதி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது. குமரி மாவட்டம் வளர்ச்சி அடைய பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்.


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 5-ந்தேதி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் ரோடு-ஷோ மூலமாக வாக்கு சேகரிக்கிறார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ரோடு-ஷோ நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அமித்ஷா வருகை திருப்புமுனை தரும் வகையில் அமையும்.

டாரஸ் லாரிகளால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதிப்பட்டு வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கழிவுகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் இங்கிருந்து வைரங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தை உரக்கிடங்கு மாவட்டமாக மாற்றி உள்ளனர். இதற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

தி.மு.க.வை சேர்ந்தவர்களின் வாகனங்கள் பறக்கும்படைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படை அதிகாரிகளின் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

ஜாதி, மதத்தை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. குமரி மாவட்டத்தை பிளவுபடுத்த தி.மு.க., காங்கிரஸ் முயற்சி மேற்கொள்கிறது. கனிமவள கடத்தலின்போது லாரி மோதி 6 பேர் பலியானார்கள். இதற்கு இந்த அமைச்சரோ, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரோ இரங்கல் எதுவும் தெரிவிக்கவில்லை.


மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கனிம வளங்களை மாநில அரசு நினைத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like