ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ’என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் மதுரை வந்தார்.
அங்கிருந்து விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த அமித்ஷா ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை 6 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , எல்.முருகன், சி.டி. ரவி மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அங்கு கோவில் கிழக்கு கோபுர வாயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பிறகு அமித்ஷா கோவில் வளாகத்தை பார்வையிட்டார். விஸ்வரூப ஆஞ்சநேயர், 22 தீர்த்தங்களையும் தரிசனம் செய்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவருகையை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் இன்று பகல் 2 மணி வரை சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாக் ஜலந்த், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடலோர காவல் படை ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.