பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் அமல்..!

கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியிலிருந்து இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது,
பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
நம்பிய நெருங்கிய உறவினராலோ பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்தக் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
66-ம் பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
பெண்ணைக் கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
18 வயதுக்கு உட்பட்ட சிறுமியைக் கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனைவரை உயர்த்தப்படுகிறது.
சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள்வரை உயர்த்தப்படுகிறது.
மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள்வரை உயர்த்தப்படுகிறது.
மீண்டும் அதைச் செய்தால், அந்தக் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள்வரை உயர்த்தப்படுகிறது.
பெண்ணைப் பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள்வரை உயர்த்தப்படுகிறது.
மீண்டும் அதைச் செய்தால், அந்தக் குற்றத்திற்காக 5 ஆண்டுகள்வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள்வரை உயர்த்தப்படுகிறது.
அமிலம் என்ற ஆசிட் வீசிப் பெண்களுக்குக் கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனைவரை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிட் வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமின் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்தக் குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும்வரை ஜாமின் அளிக்கக் கூடாது.