காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியே அமரன் - இப்படத்தை உடனே தடை செய்ய வேண்டும் : எஸ்டிபிஐ
அமரன் திரைப்படம் இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அமரன் திரைப்படம் முஸ்லிம்களை தேச விரோதிகள், குறிப்பாக காஷ்மீர் மக்களை பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் என்கிற சங்பரிவார எண்ணத்தை வழிமொழியும், உண்மைகளை மறைக்கும் திரைப்படமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தேசத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்ற நெல்லை முபாரக், “ ஒரு மரணத்தை உணர்வுப் பூர்வமாக சொல்கிறோம் என்னும் பெயரில், தொடர்ந்து ஓர் சமூகத்தையே குற்றப் பரம்பரையாக சித்தரிப்பது என்பது வேதனையின் உச்சம். திரைத்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய வெறுப்பை விதைக்கும் செயல் ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
தேச விடுதலைப் போராட்டத்தின் வீரமிக்க முழக்கமாகவும், ஜனநாயக போராட்டக் குரல்களின் மூச்சாகவும் இருந்த ஆஸாதி முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாகவும், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பஜ்ரங்தள் போன்ற மதவாத அமைப்புகளின் ஜெய் பஜ்ரங்பலி கோஷத்தை தேசப்பக்தி கோஷமாகவும் இப்படம் காட்டியுள்ளது என்றும் இது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்தார்.
காஷ்மீர் ஆண்கள் பயங்கரவாதிகளாக மாறி தங்களது மனைவிகளை விட்டுச் சென்றதால் தான் அங்குள்ள பெண்களில் அதிகமானோர் அரை விதவைகளாக இருப்பதாக திரைப்படம் காட்டியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, வடிகட்டிய பொய் பிரச்சாரமுமாகும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியே அமரன் திரைப்படம். பொதுப் புத்தியில் தவறான எண்ணங்களை விதைத்த காஷ்மீர் ஃபைல்ஸ் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படமோ, அதே அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய படம்தான் அமரன். வெறுப்பை விதைத்து கல்லாவை நிரப்பும் அரசியல் அஜெண்டாவே அமரன் படம். ஒருவரை ஹீரோவாக காட்ட, இத்திரைப்படம் ஒரு சமூகத்தையே பிரிவினைவாதிகளாக காட்சிப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு உச்சத்தின் எச்சமாக உள்ளது அமரன் திரைப்படம். வெறுப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அல்லது திணிக்கப்பட்டாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக முதல்வர் இந்த படத்தை பாராட்டியிருப்பது ஏற்புடையதல்ல. அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற வெறுப்பை திணிக்கும் திரைப்படங்களுக்கு எதிராக தங்களது குரல்களை வலுவாக எழுப்ப வேண்டும். அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.