அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்..!
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன்பாக நடப்பட்ட கொடிக்கம்பத்தை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றியபோது பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்ற போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் மீது செப்டம்பர் 9-ஆம் தேதி ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டியை ஆஜர் செய்வதற்காக கோயம்பேட்டிலிருந்து பொதுமக்கள் பயணம் செய்யும் எஸ்சிடிசி பேருந்தில் நேற்று (நவம்பர் 2) மாலை காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார். இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிய வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.