போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார் அல்லு அர்ஜூன்..!
பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா 2 படம் வசூலில் புதிய சாதனையை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பட ரிலீஸ் நாளில், ஐதராபாத்தில் உள்ள பிரபல தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானர். 8 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீன் பெற்றதால் அவர் சிறையில் இருந்து வெளிவந்தார். அதே நேரத்தில் அவரது வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்திற்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தூண்டுதலே காரணம் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில், ரேவதி பலியான சம்பவத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிக்கட்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட அவர் விசாரணைக்காக தமது வீட்டில் இருந்து இன்று கிளம்பினார்.
மனைவி, மகளுக்கு தைரியம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அல்லு அர்ஜூன் போலீஸ் ஸ்டேஷனில் முறைப்படி ஆஜரானார். விசாரணையில் அவரிடம் சம்பவம் நடந்தது பற்றிய விவரங்களை கேள்விகளாக கேட்டு அவற்றை பதிவு செய்ததாக தெரிகிறது.