1. Home
  2. தமிழ்நாடு

திமுகவுடன் கூட்டணி..? முக்கிய அறிவிப்பு..!

Q

மதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகமான தாயகத்தில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மதிமுக வின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கடந்த ஜூன் 22-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31-ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை முன்னோடி மாநிலமாகவும், வளர்ச்சி பாதையிலும் கொண்டு செல்லும் திமுக ரசு தொடரவும், இந்துத்துவ மதவாத சக்திகளை தோற்கடிக்கவும், மதிமுக எடுத்த முடிவை 2026 சட்டமன்றத் தேர்தலில் கடைப்பிடிப்பது என்று நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற, சோசலிச எனும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் செயல்த் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு கட்சிகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

இதேபோல, வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவிக்க வேண்டும். மதுரையில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்க கோட்பாடுகளை இழிவு படுத்தியும், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் வீடியோ வெளியிட்டதற்கு மதிமுக நிர்வாகிகள் குழு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. திருச்சியில் செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாள் விழா, மாநில மாநாடு நடத்துவது என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கும், சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஜூலை 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மண்டல வாரியான செயல் வீரர்கள் கூட்டங்களை திட்டமிட்டு சிறப்பாக நடத்துவதற்கு மாவட்டக் கழகங்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும்.

தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அந்தப் பணியிடங்களை நிரப்பக் கூடாது. அந்தப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது. இந்த ஆண்டோடு அந்தப் பாடப் பிரிவை மூட வேண்டும் என்கிற பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்பன ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2021-ஆம் ஆண்டு பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மதிமுகவின் சார்பாக போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி திமுகவில் இணைந்தனர். இதனால், திமுக – மதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் இன்று (ஜூன் 29) நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கூட்டத்தில் பேசிய வைகோ , வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like