1. Home
  2. தமிழ்நாடு

#WorldEarthDaySpl பூமிக்காக இதையெல்லாம் செய்யலாமே!

#WorldEarthDaySpl பூமிக்காக இதையெல்லாம் செய்யலாமே!


பூமியின் பாதுகாப்பிற்காக அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். அதை இந்த பூமி தினத்தில் இருந்து தொடங்குவோம்.

சுற்றுச்சூல், இயற்கை வளங்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மறுபக்கம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. தினம் தினம் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஐ.நாவின் குழந்தை நல நிறுவனம் யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் ஒவ்வொரு நாளும் 700க்கும் மேற்பட்ட சிறார்கள் இறக்கின்றனர். ஒரு வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே எழுபது லட்சம் குழந்தைகள், தீவிர மாசுக்கேடு உள்ள பகுதிகளில் வாழ்வார்கள். மேலும் உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வாழ்வார்கள். உலகம் முழுவதும் ஏறத்தாழ பத்து லட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே இறக்கின்றனர்.

பூமியின் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல... மனிதனின் பாதுகாப்புக்காகவும் அன்றாட வாழ்வில் நாம் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியம். அதை இந்த பூமி தினத்தில் இருந்து தொடங்குவோம்.

பிளாஸ்டிக் தவிர்ப்போம்:
உலகில் உருவாகி அழிந்து விடும் எதுவும் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அழிவே இல்லாமல் இருப்பவை ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக பெரிது. அந்த வகையில் பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலின் மிக பெரிய எதிரி. இது நமக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கேடு குறித்து நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்றை பயன்படுத்தாமல் இருப்பது கடினம் தான்.

எனவே முடிந்த வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கலாம். அழகழகான துணி பைகள் சந்தையில் கிடைக்கின்றன. அல்லது ஒரு பிளாஸ்டிக் பையையே கடைக்கு செல்லும் போதெல்லாம் எடுத்துச் செல்லலாம். மேலும் ஸ்டாரா, டப்பாக்கள், வாட்டர் பாட்டில்கள் போன்றவற்றை தவிர்ப்பது பூமிக்கும் நல்லது... நமக்கும் நல்லது.

மின்சார விரயம் வேண்டாமே:

மின்சார பயன்பாட்டை குறைப்பது தனிப்பட்ட முறையில் எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றே. அறையில் இருந்து வெளியே செல்லும் போது அறையின் ஃபேன், லைட்டையெல்லாம் அணைத்து விட்டு செல்லுங்கள். வருடத்திற்கு ஒரு முறை வாட்ஸ்ஆப் மெசேஜ்களை பார்த்து 1 நிமிடம் மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருப்பதை விட நாள் தோறும் மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க பழகுகள். இது உங்கள் பர்சின் வளத்தையும் காப்பாற்றும்.

நடைப்பயிற்சி நல்லது:
எரிப்பொருள் பயன்பாட்டை குறைப்பது சுற்றுச்சூழலை காட்டிலும் நமது உடலுக்கு நல்லது. அருகே இருக்கும் அண்ணாச்சி கடைக்கு பைக்கில் தான் செல்ல வேண்டுமா? கொஞ்சம் நடந்து செல்லலாமே. அதே போல பைக், கார் பயன்பாட்டில் இருந்து சைக்கிளை பயன்படுத்த தொடங்கலாம்.

அவசரமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி எல்லாம் செய்ய முடிவில்லை என்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ் சைக்கிள். மேலும் முடிந்த வரை பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம். இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகையினால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தலாம்.

சாப்பாட்டை வீணாக்காதீங்க:
நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் தட்டை அடைவதற்கு முன் பெரிய பயணத்தை மேற்கொண்டுவிட்டுதான் உங்களை வந்து சேரும். உணவை தயாரிக்க தேவையான பொருட்கள் விளைவிப்பதில் தொடங்கி அது சந்தைக்கு வந்து அதை நீங்கள் வாங்கி உணவு தயாரிப்பது வரை பெரிய பயணம் அது. எனவே சாப்பாட்டை வீணாக்குவது விவசாயத்துக்கும் உங்கள் தட்டிற்கும் இடையேயான பலரது உழைப்பை, இயற்கை சக்தியை வீணாக்குவதாகும்.

மரம் வளர்ப்போம்:
அடிக்கின்ற வெயிலில் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையின் ஏதோ ஒரு பகுதியில் உங்களுக்கே தெரியாமல் பைக்கின் வேகம் குறையும். கவனித்து பாருங்கள் அந்த இடத்தில் நிச்சயம் மரங்கள் இருக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும் மரங்கள் இருக்கும் பகுதி மட்டும் குளுமையாக தான் இருக்கும்.

சோ.. முடிந்த வரை மரங்கள் நடுங்கள். தனியாக இதை செய்ய முடியாது. கூட்டாக மாதத்திற்கு ஒரு நாள் நண்பர்களுடன் சேர்ந்து இதை செய்யலாம். நல்ல வீக்கெண்ட் பிளானகவும் இது இருக்கும்.

newstm.in

Trending News

Latest News

You May Like