நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. ஆனால், அரசிடம் அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது என்று நேற்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில், ஆணையர் நந்தகுமாரை தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட மாணவி மரணத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே வேளையில் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் ஆணையரிடம் முறையிட்டதாக தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு இருப்பது போல், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இன்றைய ஸ்ட்ரைக்கில் 60 சதவீதம் பள்ளிகள் பங்கேற்றதாகவும், கல்வி மற்றும் காவல், வருவாய் அதிகாரிகளின் மிரட்டல் காரணமாக 40 சதவீத பள்ளிகள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் கூறிய கூட்டமைப்பு நிர்வாகிகள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பதாகக் தெரிவித்தனர்.
நாளை முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் நடத்திய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.