அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த முடிவு..!
யு.ஜி.சி. செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான வரும் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது நாட்டுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும்.
அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தடகள மற்றும் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களையும் அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அதனை செயல்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிட் இந்தியா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நடையோட்டம், கைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப்பந்து, மேசைப்பந்து, சாக்குப்போட்டி, கயிறு தாண்டுதல், கோகோ போன்ற போட்டிகளை நடத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.