ரசிகர்களுக்கு அஜித் கேள்வி : அஜித் வாழ்க, விஜய் வாழ்கன்னு சொல்லுற நீங்க எப்போ வாழப் போறீங்க?

துபாயில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித் பேசியதாவது,
"சமூக வலைதளங்கள் தற்போது TOXIC ஆக உள்ளது. வாழ்க்கை மிகவும் சிறிது. ஏன் இவ்வளவு TOXICஆக இருக்கவேண்டும்? மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள். அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? உங்கள் அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுங்கள். எனது ரசிகர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நானும் சந்தோஷமாக இருப்பேன்" என்று கூறியுள்ளார். துபாயில் தற்போது 24H சீரிஸ் எனும் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்குமார் தலைமையிலான 'அஜித்குமார் ரேஸிங் அணி' இடம்பெற்றிருந்தது. இதற்கான பயிற்சியில் அஜித்தும் ஈடுபட்டிருந்தார். ஆனால், பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகினார். இருப்பினும் அவரது அணி போட்டியில் பங்கேற்றது. பிரிவு 991ல் இவரது அணி 3வது இடத்தை பிடித்த அசத்தியது.
அணியின் சாதனைக்கும் அவர்களை வழிநடத்திய அஜித்குமாருக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். போகும் போக்கை பார்த்தால் அவர் சினிமாவை விட்டுவிட்டு, கார் பந்தயத்தில் முழு நேரமாக இறங்கி விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஜனவரி இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும், 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என அவரது 2 படங்கள் திரைக்கு வருகின்றன.
காரை யார் வேண்டுமானாலும் ஓட்டி விடலாம். ஆனால் பந்தயத்தில் ஓட்டுவதற்கு தனி பயிற்சி வேண்டும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போய்விடும் அளவுக்கு பந்தயங்கள் ஆபத்தானவை. இருந்தாலும் கார் பந்தயங்களில் இளைஞர்களின் ஈடுபாடு பெரியதாக இருக்கிறது. இப்படி துணிந்து வரும் இளைஞர்களுக்கு '24 H சீரிஸ்' பந்தயம் சோதனையை கொடுக்கும். இதனை டச்சு மோட்டார்ஸ்போர்ட் விளம்பரதாரரான கிரெவென்டிக் ஏற்பாடு செய்திருக்கிறது. ரேஸிங் நேரம் 12-24 மணி நேரம் வரை இருக்கும். அதனால்தான் இளசுகளை மிகவும் சோதிக்கும் பந்தயங்களில் மிக முக்கியமானதாக '24 H சீரிஸ்' இருக்கிறது. இதில் பங்கேற்கும் அணியில் 3-5 பேர் வரை இருப்பார்கள். ஒருவர் சோர்வடையும்போது மற்றொருவர் வண்டியை ஓட்டுவார். இப்படியான போட்டியில்தான் அஜித் அணி ஜெயித்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.