அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு..!
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சாமி கும்பிட வந்த நிகிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் என தமிழ்நாடு அரசு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்தது.
இந்த மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக நீதி விசாரணை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணையை துவங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.எனவே, விரைவில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.