1. Home
  2. தமிழ்நாடு

போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது வலிப்பு ஏற்பட்டு அஜித் உயிரிழப்பு : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

1

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் தனது தாயாருடன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது காரை அஜித்குமாரிடம் பார்கிங் செய்யச் சொல்லி சாவி கொடுத்துச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த 10 சவரன் நகையைக் காணவில்லை என பெண் மருத்துவர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அத்துடன், கோயிலுக்கு அருகே அழைத்துச் சென்றும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசாரின் கொடூர தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்தார்.

தகவலறிந்த அஜித்குமார் உறவினர்கள் உடனடியாக திருபுவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்சிக்கு உள்ளாக்கியது. தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என அதிமுக, பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இதனையடுத்து, ஆறு போலீசாரை சிவகங்கை எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுமார் ஐந்து மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, அஜித்குமார் உடல் போலீஸ் பாதுகாப்புடன் மடப்புரம் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், கழுத்தின் சங்குப் பகுதியில் இருந்த காயத்தின் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், கடும் சித்திரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அஜித்குமார் விவகாரத்தில் போலீஸ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை நகல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “நகை மற்றும் பணம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமார் மீது சந்தேகம் எழுந்ததால் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றோம். காரை யார் பார்க் செய்தது என அஜித்குமாரிடம் பலமுறை கேட்டபோது அவர் சரவணன், அருண், தினகரன் என மூன்று பேரை மாற்றி மாற்றி சொல்லியுள்ளார். மூவரையும் அழைத்து விசாரித்தபோது, அவர்கள் யாரும் காரை பார்க் செய்யவில்லை என்று தெரியவந்தது.

அஜித்குமாரின் தம்பியை விசாரிக்க அழைத்துச் சென்ற சமயத்தில், நகையை எடுத்ததாக அஜித்குமார் ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய நகைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அங்கு சென்று தேடும்போது நகை கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அஜித் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இளைஞரின் காவல் நிலையம் மரணம் விவகாரத்தில் உண்மையை மறைக்கும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட காவலர்கள், அதனை மறைக்க உடந்தையாக இருந்த அனைவரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Trending News

Latest News

You May Like