அஜித் அகர்கருக்கான சம்பளம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்வு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த சேத்தன் சர்மா தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேசனில் சிக்கினார். இதனை விசாரிக்க பிசிசிஐ முடிவு செய்த போது, தானாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் இந்திய அணிக்கான தேர்வு குழு தலைவர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது.
இதன் காரணமாக இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் செயல்பட்டு வந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை கூட சிவசுந்தர் தாஸ் தலைமையிலான தேர்வு குழுவே தேர்வு செய்தது. அதுமட்டுமல்லாமல் அணித் தேர்வுக்கு பின் செய்தியாளர்களை கூட சந்திக்காமல் தேர்வு குழுவினர் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தேர்வு குழு தலைவருக்கான இடத்தை நிரப்பும் பணியை பிசிசிஐ மேற்கொண்டது. அப்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தேர்வு குழு தலைவராக செயல்பட அவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முன்னாள் வீரர் அஜித் அகார்கரைத் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆல்ரவுண்டரான அகார்கர், இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதத்துடன் 571 ரன்கள் எடுத்துள்ளார். 58 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அகார்கர், 1269 ரன்களையும் 288 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 4 டி20 போட்டிகளில் விளையாடி ரன்களையும் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை 42 போட்டிகளில் விளையாடி 179 ரன்களையும் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக அகார்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற இந்திய அணியிலும் அகார்கர் இடம்பிடித்திருந்தார். 2000-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 21 பந்துகளில் அதிவேக அரைசதம் கண்டது இவருடைய சாதனையாக உள்ளது.
இந்த நிலையில் அஜித் அகர்கருக்கான சம்பளத்தை பிசிசிஐ உயர்த்தி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை, ரூ.3 கோடியாக பிசிசிஐ அஜித் அகர்கருக்கு வழங்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் பலரும் தேர்வு குழு பொறுப்புக்கு வர முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2 மடங்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.