அடுத்தடுத்த சிக்கலில் ஏர் இந்தியா..! டெல்லி – ராஞ்சி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு..!

டெல்லியில் இருந்து ராஞ்சி செல்வதற்காக இன்று பிற்பகல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. இது 6.20 மணிக்கு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. ஆனால் நடு வானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனை விமான ஓட்டி கண்டறிந்த நிலையில் உடனே தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போயிக் 737 மேக்ஸ் 8 விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது. இதுதொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்களின் விமானம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனடியாக டெல்லி திரும்பி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு பரிசோதனைகள் செய்யப்பட்டன. முழுவதும் பிரச்சினை ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் விமான சேவை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக பிரிட்டிஷ் எஃப்-35 ஃபைட்டர் ஜெட் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கேரளாவில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டு லுஃப்தான்சா விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. பின்னர் ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் மீண்டும் திரும்பிவிட்டது.கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் நான்கு விமானங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
இவ்வாறு அடுத்தடுத்து விமானங்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் பயணிகள் மத்தியில் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அகமதாபாத் விமான விபத்தில் இருந்தே இன்னும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் மீண்டும் மீண்டும் விமானப் பயணங்கள் கேள்விக்குறியாகும் நிகழ்வுகளா? என்று சமூக வலைதளங்களிலும் எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.