அதிமுக மாநிலங்களவை சீட்...இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற பெயர்கள்...அப்போ தேமுதிக நிலை..?

அதிமுக சார்பில் இரண்டுமாநிலங்களவை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க பலத்த போட்டியே நடைபெறுகிறது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்குவதாக அதிமுக வாக்களித்தது என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவோ அப்படி எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று மறுக்கின்றனர்.
அதிமுகவுக்கு உள்ளேயே அந்த இரண்டு சீட்டுகளுக்கு பலர் முண்டியடிக்கின்றனர். இப்படி இருக்க தேமுதிகவும் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பொறுமை கடலினும் பெரிது, இப்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “மாநிலங்களவை சீட் தொடர்பாக தேமுதிகவை விட பத்திரிக்கையாளர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு 5 மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை” என்று பேசினார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது, யாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பார்கள் என்று விசாரித்தோம். இதற்கு முன்னர் அதிமுக சார்பில் போட்டியிட்டு மாநிலங்களவை சென்ற தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அதிமுகவுக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை. 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு வராமல் பாஜக பக்கம் சென்றனர். எனவே கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்க அதிமுக இம்முறை தயாராக இல்லை. இதில் தேமுதிகவையும் நம்பத் தயாராக இல்லை.
கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதற்கு பதில் கட்சியினருக்கு கொடுத்தால் இன்னும் அதிக வேகத்துடன் கட்சி பணியாற்றுவார்கள் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் விருப்பமாகவும் இருக்கிறது.
வழக்கறிஞர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகை விந்தியா, ராஜ் சத்யன், ராயபுரம் மனோ ஆகியோரது பெயர்கள் மாநிலங்களவை தேர்தல் விஷயத்தில் அடிபடுகிறது. இதில் இன்பதுரைக்கு வாய்ப்பு அதிகம்” என்கிறார்கள்.