அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்: இபிஎஸ்!
அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு, அவன் பேர் மனிதனல்ல’ என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளை மெய்ப்பிப்பதுபோல், விதிவசத்தால் முதல்வரான மு.க. ஸ்டாலின் நாளும், பொழுதும் வேஷம் கட்டி மக்களை ஏமாற்றி வருவது மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கும் ஊழல்களையும், கொள்ளைகளையும் தோலுரித்துக் காட்டும் எதிர்க்கட்சியினரை குறிப்பாக, அதிமுகவினரை அடக்கி ஒடுக்குவதற்காக காவல் துறையை ஏவி விடுவது தொடர்கதையாக உள்ளது.
தன் மீதும், தன்னுடைய அரசின் மீதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவும், தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, அதனால் பாதிப்படைந்துள்ள மக்களின் கோபத்தை மடைமாற்றுவதற்காக, அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனையும் செயலை இந்த திமுக அரசு செய்து வருவது ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும்.
கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக்காட்டி வருகிறார். அதிமுக அறிவிக்கும் பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார். மாவட்டக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கும் திமுக அரசை எதிர்த்து நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று, கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கண்டனப் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
அப்படிப்பட்ட செயல்வீரரின் கழகப் பணிகளை முடக்க வேண்டும் என்பதற்காக, சிவில் பிரச்சினை ஒன்றில் பொய் வழக்கு பதிவு செய்து, அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று செய்திகளைப் பரப்பும், காவல் துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் செய்வது சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இதுசம்பந்தமாக சில நாட்களுக்கு முன்னரே எனது பேட்டியின் மூலம் திமுக அரசின் முதல்வரை கண்டித்திருந்தேன். இதே நிலை எதிர்காலத்தில் திமுக அரசின் அமைச்சர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறைப் பறவையாக இருக்கும், முதல்வரின் அபிமானத்துக்குரிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். பல நூறு கோடிகளை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அமலாக்கத் துறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாமல் ஆட்டம் காட்டி வரும் அசோக்குமார், அடிக்கடி இரவு நேரங்களில் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளுக்கு ரகசியமாக வந்து செல்வதாகவும், அவரை கண்காணித்து பிடித்துத் தரும்படி அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
எம்.ஆர். விஜயபாஸ்கரை கொலைக் குற்றவாளிபோல் சித்தரித்து, தேடப்படும் குற்றவாளியைப்போல் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் தேடுவதும், அவருடைய உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளை விசாரணை என்ற பெயரில் சிரமப்படுத்துவதுமாக உள்ள திமுக அரசின் முதல்வரின் ஏவல்துறை, அமலாக்கத் துறையால் ஓராண்டுக்கும் மேலாக உண்மையிலேயே தேடப்பட்டு வருபவரை, அமலாக்கத் துறையே அவரது நடமாட்டத்தை திமுக அரசின் காவல் துறைக்கு தெரிவித்தும், பதுங்கி இருக்கும் தன் கட்சிக்காரர் அசோக்குமாரை கைது செய்து மத்திய அமலாக்கத் துறை வசம் ஒப்படைக்காமல் இரட்டை வேடம் போடுவது கடும் கண்டனத்துக்குரியது.
இரட்டை வேடம் போடும் திமுக அரசு, மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர்களை சிறையில் அடைத்து முடக்கலாம் என்று தனது கோர முகத்தைக் காட்டுவதை அனைவரும் நன்கு அறிந்துள்ளனர்.இந்த வழக்குக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இது, மேலும் தொடர்ந்தால் அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். தன் கையில் உள்ள அதிகாரம் நிரந்தரமானது என்று பொம்மை முதல்வர் நினைப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
அழிவை நோக்கி வேகமாக செல்பவன், தன்னிடம் உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவான்; அந்த அதிகாரமே அவனுக்கு முடிவுரை எழுதும், என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதை, மமதையோடு செயல்பட்டு வரும் திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.