1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது : ஆர்.பி உதயகுமார்!

1

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகி உள்ள நிலையில், நீதிமன்றமும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது. அதிமுகவை கைப்பற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்து கடந்த மார்ச் 18ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதேநேரம் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக எந்த தடையும் கிடையாது என்று கூறி, இந்த வழக்கில் இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

லோக்சபா தேர்தலில் அதிமுக தனி அணியாகப் போட்டியிட்ட நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளிவரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெல்வாரா என்பது தெரியவரும். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும், மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கினால் தனித்து நின்றே ஜெயிக்க முடியும் என மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி இருப்பதாகவும், ஓபிஎஸ்ஸை மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதாக வரும் செய்திகள் துளியும் உண்மை இல்லை. அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை. அதிமுகவை அதிக வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் தனது சுயலாபத்துக்காக, பதவிக்காக அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்து தாக்கல் செய்து வந்தவர். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி சென்றது. அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி ஓபிஎஸ்-ன் வெற்றி அல்ல.

தேர்தலின்போது அதிமுகவுடன் யார் கூட்டணி பேசுகிறார்களோ அவர்களை டெல்லியில் இருந்து வந்து தூக்கிச் சென்றனர். ஆளுநர் ஆக்குகிறோம், மத்திய அரசில் அமைச்சர் ஆக்குகிறோம் என சொல்லி எங்களுக்கு இடையூறு செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like